Wednesday, 17 August 2016

கவிதைகளாகும் பிதற்றல்கள்


பெருமழைக்குப் பின்னான
சிறுதூறல் போல்
பாலையில் பெய்யும்
உன் நினைவுகள்

முகம் நிரம்ப நிரப்பி
தழும்பித் தெறிக்க
தெளித்துச் செல்லும்
உன் சிரிப்புகள்

எங்கோ கேட்ட பாடலின்
நடுவுகளில் காற்புள்ளிகளாய்
என் பெயர் செருகும்
உன் பேச்சுகள்

தொடுதல் உணர்வு வேண்டி
எனக்கும் காற்றுக்கும்
பங்காளிச் சண்டை இழுக்கும்
உன் கூந்தல்கள்

நெடுஞ்சாலை வண்டியின் முகவிளக்குகளாய்
ஒளி கூட்டி குறைத்து
என்னிடம் பேசும்
உன் கண்கள்

மழைக்கால குழிகளில்
குதித்து விளையாடும் மிதிவண்டியாய்
மாற ஏங்க வைக்கும்
உன் கன்னங்கள்

இடைவெளிகளின் ஊடே
அலையும் காற்றின் வழியே
கடத்தி வரும்
உன் தொடுதல்கள்

என எண்ணி எண்ணி
மாய்ந்து பின்
கவிதைகளாய் மாற்றுகிறேன்
இப்பிதற்றல்களை..

படத்தை கடன் அளித்தவர்: www.ndtv.com

No comments:

Post a Comment